26 வயதில் ரூ.7 கோடி கனவு வீடு: தினமும் 18 மணி நேர உழைப்பால் சாதித்த சிங்கப்பூர் இளம் பெண்.!
கடின உழைப்பு, கட்டுப்பாடான வாழ்க்கை முறை மற்றும் திட்டமிட்ட பணச் சேமிப்பு இருந்தால் இளம் வயதிலேயே கனவுகளை நனவாக்க முடியும் என்பதற்கு உயிர்ப்பான உதாரணமாக சிங்கப்பூரைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் கிரிஸ் திகழ்கிறார்.
கிரிஸ் தனது 14 வயதிலிருந்தே வேலைக்கு செல்லத் தொடங்கியவர். இளமையிலேயே வாழ்க்கையின் பொறுப்புகளை உணர்ந்த அவர், தனது 19-வது வயதில் முதலீடு செய்வதை தொடங்கினார். தேவையற்ற செலவுகளை முற்றிலும் தவிர்த்து, ஒவ்வொரு ரூபாயையும் கண்காணித்து, மாதாந்திர பட்ஜெட் போட்டு செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு நாளில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை தொடர்ந்து வேலை செய்த கிரிஸ், அதோடு மட்டுமல்லாமல் பகுதி நேரமாக புகைப்படம் மற்றும் வீடியோ புரொடக்ஷன் பணிகளையும் செய்து வந்துள்ளார். ஜிம்மிற்கு செல்லும் நேரத்திலும் கூட வேலை தொடர்பான பணிகளைச் செய்து, வாரத்தில் ஏழு நாட்களும் வேலைக்கு மட்டுமே நேரம் ஒதுக்கியுள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக செய்த கடின உழைப்பின் பலனாக, கிரிஸ் சிங்கப்பூரில் ரூ.7 கோடி மதிப்பிலான தனது கனவு இல்லத்தை சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த சாதனை குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வீடு வாங்கிய விஷயம் அவரது பெற்றோருக்கே தெரியாததாகும். வீட்டின் சாவியை வாங்கிய பின்னரே, அவர் தனது பெற்றோரிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். மேலும், இந்த வீட்டை வாங்க வங்கி கடன் அல்லது லோன் எதையும் பயன்படுத்தவில்லை என்றும், தன் உழைப்பால் சேமித்த பணத்தை முழுமையாக செலுத்தியே ரூ.7 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியதாகவும் கிரிஸ் தெரிவித்துள்ளார்.
“எனக்கு 27 வயதாகும் போது எனக்கென்று ஒரு வீடு, நிலம் இருக்க வேண்டும் என்பது என் கனவு. 2025 ஆம் ஆண்டின் முடிவில் அதை நான் நிறைவேற்றிவிட்டேன்” என்று அந்த வீடியோவில் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இளம் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் இந்த சாதனை, உழைப்பும் திட்டமிடலும் இருந்தால் வயது ஒரு தடையல்ல என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.
