கல்யாணமான 10 நாளில் மனைவியை தலையணையால் கொலை செய்த கணவர் குன்றத்தூரில் பயங்கரம்.!
திருமணமாகி வெறும் 10 நாட்களே ஆன நிலையில், புதுமணத் தம்பதி இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை தளபதி தெருவில் வசித்து வந்த கணினி மென்பொறியாளரான விஜய் (25), தனது அலுவலக சக ஊழியரான யுவஸ்ரீ (21) யை கடந்த டிசம்பர் 13ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை யுவஸ்ரீயின் தங்கை வீட்டிற்கு சென்றபோது, வீடு பூட்டியிருந்தது. பலமுறை கதவைத் தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, யுவஸ்ரீ உயிரிழந்த நிலையில் படுக்கையில் கிடந்தார். அதே வீட்டில், விஜய் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தது தெரிய வந்தது.
முதற்கட்ட விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக யுவஸ்ரீயை தலையணையால் மூச்சுத்திணறடித்து கொலை செய்துவிட்டு, பின்னர் விஜய் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருமணமான சில நாட்களிலேயே நிகழ்ந்த இந்த துயர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
