ரகுவரன் என்னும் நடிப்பு பாட்ஷாவின் பிறந்தநாள் இன்று.. மறக்கமுடியாத கதாபாத்திரங்கள்.!

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் காலம் கடந்தும் ஒரு சில நடிகர் மட்டும்தான் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள்..அந்த விதத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பினால் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகில் வாழக்கூடிய அனைத்து மொழி ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் ரகுவரன்
டிசம்பர் 11 இன்று ரகுவரனின் 67வது பிறந்தநாள். 49வயதில் அவர் மறைந்தாலும் அவரின் தனித்துவமான நடிப்பும், வசீகர குரலும், ஒருவித ஸ்டைலான உடல்மொழியும் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நிலைத்து நிற்கின்றன.
ரகுவரன் கதாநாயகனாக, குணசித்திர நடிகராக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் முத்திரை பதித்திருந்தாலும், அவர் வில்லனாகவே அதிகம் அறியப்படுகிறார். பொதுவாகவே வில்லன்கள் என்றால் பார்ப்பதற்கு மிக விகாரமாக இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து ஹீரோவையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு மிக டீசண்டான உடல் மொழியில் தனக்கென்று ஒரு ட்ரெண்ட்ஷட்டை உருவாக்கியவர் தான் நடிகர் ரகுவரன்
தமிழ் சினிமாவின் பெரும்பாலான பழைய படங்களில் வரும் வழக்கமான வில்லன்கள் போல் அவர் பறந்து, பறந்து அதிகம் சண்டை போட்டது இல்லை. ‘நான் யார் தெரியுமா’ போன்ற நீண்ட வசனங்களும் அவர் பேசியது இல்லை. ஹீரோக்களிடம் வேண்டுமென்ற வம்புக்கு சென்று அவரிடமிருந்து அடிவாங்கும் காட்சிகளிலும் ரகுவரன் அதிகம் நடித்தது இல்லை.
மாறாக, வில்லத்தனத்திலும் ஒருவித ஹீரோயிசத்தைக் காண்பித்தவர். குறிப்பாக, வசனங்களை பேசும் விதம், சிறு சிறு உடல் அசைவுகளால் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தபோது கூட அரங்கம் அதிர கைதட்டல் வாங்கியவர்.

ரகுவரன் எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும், அவர் பெயரை சொன்னால் சட்டென பலருக்கும் நினைவுக்கு வருவது மார்க் ஆண்டனியாக நடித்த பாட்ஷாதான். ‘ஆண்டனி… மார்க் ஆண்டனி’ என அவர் பேசும் வசனம் தலைமுறைகளை தாண்டி நிற்கிறது. ரஜினியின் பாட்ஷா கதாபாத்திரத்தை எப்படி மறக்க முடியாதோ, அதேபோல் ஆண்டனியையும் எளிதில் கடந்துவிட முடியாது.
பல ஆண்டுகளை கடந்தாலும் ரகுவரனின் குரல் பலரது காதுகளுக்குள் இன்றும் ஒலிக்கிறது. சமீபத்தில் பாட்ஷா ரீ ரிலீஸ் ஆனபோது கூட மார்க் ஆண்டனியை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால் ரஜினிகாந்த் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் பாட்ஷா பார்ட் 2 எடுத்தால் ரகுவரன் உயிரோடு இருந்திருக்க வேண்டும் காரணம் அந்த கதாபாத்திரத்தை அவரை தவிர வேறு யாராலும் அவ்வளவு சிறப்பாக செய்து முடித்து விட முடியாது..

சில படங்களை உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் முதல்வராக நடித்து இருக்கிறார்கள். ஆனால், முதல்வனில் அரங்கநாதன் என்ற பழுத்த அரசியல்வாதியாக, முதல்வராக வரும் ரகுவரனுக்கு தனித்த இடம் உண்டு. அதிலும் அர்ஜூன் அவரை பேட்டி எடுக்கும் காட்சியில் அவருடைய நடிப்பு சிறப்பாக இருந்திருக்கும். ‘முதல்வர் பதவின்னா சாதாரணமா’ என்று அவர் காட்டும் கோபம், ஒருநாள் முதல்வராக அர்ஜூன் சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் போது அவர் காட்டும் முகபாவனை உடல் மொழி சில இடங்களில் அறிவுப்பூர்வமாக உதாரணம் காட்டும் திருக்குறள் என அந்தப் படத்தில் நடிகர் அர்ஜுனையே தூக்கி சாப்பிட்டு இருப்பார்.

இரணியன் என்னும் படத்தில் நடிகர் முரளியை எவ்வளவு தூரம் ரசிகர்கள் கொண்டாடினார்களோ அதே அளவுக்கு ரகுவரணையும் கொண்டாடி தீர்த்தார்கள்
வின்சென்ட் செல்வா இயக்கத்தில் முரளி நடித்த படம் இரணியன். தஞ்சை, பட்டுக்கோட்டை பகுதியில் வாழ்ந்த இரணியன் என்பவரை மையமாக வைத்து, புனையப்பட்ட கதை இது. அதில் கொடுமைக்கார பண்ணையாராக வருவார் ரகுவரன். ‘ஆண்டே, ஆண்டே’ என ஊர் மக்கள் அவரை பயம் கலந்த மரியாதையுடன் அழைப்பார்கள். அந்த விவசாய தொழிலாளர்களை, கூலிகளை கொடுமைப்படுத்துகிற, வெறுப்பை உமிழ்கிற பண்ணையாராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ரகுவரன்.

90ஸ் கிட்ஸ்களின் காலகட்டத்தில் ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் மல்லிகார்ஜுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரகுவரன். அதில் அவருக்கான காட்சிகள் குறைவு என்றாலும், வழக்கமான தனது நடிப்பால் தனித்து தெரிவார். குறிப்பாக, கிளைமாக்ஸில் குண்டு வெடிப்பு காட்சி அவருடைய நடிப்பில் இன்றைக்கும் நினைவிலிருக்கும் காட்சியாக உள்ளது.

80களில் புரியாத புதிர் என்னும் படத்தில் ஒரே ஒரு வார்த்தையை படம் முழுக்க பேசி மிக பிரபலமானவர் அந்தப் படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் தன் மனைவி மீது சந்தேகித்து அவரை கொடுமைப்படுத்துபவராக இந்த படத்தில் வருவார் ரகுவரன். இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். ரகுமானுக்கு வில்லனாக ரகுவரன் வருவார். பெண்கள் மீது வெறுப்பு கொண்ட சக்ரவர்த்தியாக நடித்து இருப்பார். அவரின் ‘ஐ நோ… ஐ நோ’ என்ற பிரபலமான வசனம் இந்த படத்தில்தான் இடம் பிடித்தது. அந்த வசனத்தை பல வித்தியாசமான குரல்களில் பேசியிருப்பார்.

மக்கள் என் பக்கம் என்னும் திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அரசியலுக்கும் பொருந்தும் என்றே சொல்லலாம். அதில் வில்லனாக நடித்து வந்த சத்யராஜ் இந்த படத்தில் வில்லத்தனமான கதாநாயகனாக நடித்தார். அவருக்கு விசுவாசமான நபராக, ரமேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரகுவரன். 1987ல் கார்த்திக் ரகுநாத் இயக்கிய இந்த படத்தில் ரகுவரன் கதாபாத்திரம் படத்துக்கு பலமாக அமைந்தது.

பூவிழி வாசலிலே என்னும் திரைப்படத்தை இப்போது வரை ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் பாசில் இயக்கிய இந்த படத்தில் வில்லனாக வரும் ரகுவரனுடைய தோற்றமே வித்தியாசமாக இருக்கும். கோட் அணிந்து, கையில் ஊன்றுகோலுடன் வருவார். அவருக்கு அதிக வசனங்கள் கிடையாது. ஆனால், கண் அசைவு, புருவ அசைவில் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அருணாச்சலம் திரைப்படத்தில் இடைவெளிக்கு பிறகு சில காட்சிகளிலே வந்திருந்தாலும் தனக்கே உரித்தான பாணியில் தன்னுடைய தனித்துவமான நடிப்பில் முத்திரை பதித்திருப்பார் நடிகர் ரகுவரன் சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இந்த படத்தில் கொஞ்சம் ஸ்டைலான வில்லனாக வந்தார். ரஜினிகாந்துடைய பணத்தை அபகரிக்க வேண்டும் என்ற பேராசை பிடித்த வில்லனாக நடித்திருப்பார்

ரசிகர்களால் இன்று வரை மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படக்கூடிய படம் தான் ரட்சகன். சமீபத்தில் வெளியான கூலி திரைப்படத்தில் கூட நடிகர் நாகார்ஜுனாவை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள் பார்ப்பதற்கு அப்படியே ரட்சகன் படத்தில் இருந்தது போன்றே இன்றும் அப்படியே இருக்கிறார் என்று தியேட்டரில் விசில் அடித்தார்கள்..பிரவீன்காந்தி இயக்கிய இந்த படத்தில் ஒரு தொழிற்சாலையை கைப்பற்ற நினைக்கும், நாகர்ஜுனாவின் கோபத்தை துாண்டும் வில்லனாக வருவார். அவரின் கதாபாத்திரத்தின் பின்னணி, அவரின் ஆசை ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு அதுவும் குறிப்பாக ஜப்பானில் அவர் நடித்த முத்து திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் ரகுவரன் இணைந்து நடித்த படம் தான் இது.. ராஜசேகர் எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். ரஜினியை ஏமாற்றுகிற கதாபாத்திரம். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து இருப்பார்.ஒரு சில காட்சிகள் வந்திருந்தாலும் அவருடைய நடிப்பினை மிகவும் திருப்திகரமாக செய்து முடித்து இருப்பார்

மேலே குறிப்பிட்ட வில்லன் கதாபாத்திரங்கள் தவிர, குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். அதில் அஞ்சலி, சம்சாரம் அது மின்சாரம், பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ரன், யாரடி நீ மோகினி ஆகியவை முக்கியமான படங்கள்.
மறைந்த நடிகர் ரகுவரன் குறித்து, அந்த காலத்தில் வில்லனாக பல படங்களில் நடித்திருந்த பொன்னம்பலம் கூறுகையில், ‘நானும் அவரும் பல படங்களி்ல இணைந்து நடித்து இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு 10க்கும் அதிகமான படங்களில் நான் ‘டூப்’ போட்டு இருக்கிறேன். அப்போது என்னை உற்சாகப்படுத்துவார். ‘அதிக ஊதியம் இல்லாமல் நல்லா வேலை செய்றீங்க ஜி, பின்னால் பெரிய ஆளாக வருவீங்க’ என்று கட்டிப்பிடித்து சொல்வார். அவருக்கு கடவுள் பக்தி அதிகம். சாய்பாபாவை அதிகம் கும்பிடுவார். தவிர, எல்லாமே சீக்கிரம் முடிய வேண்டும் என நினைப்பார். அதேபோல், குடித்து குடித்து அவருடைய வாழ்க்கையையும் சீக்கிரம் முடித்துக்கொண்டார்” என்கிறார். டியூடு படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அம்மாவாக நடித்த நடிகை ரோகிணி தான் ரகுவரனின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது