இயக்குனர் பாலா சார் எனக்கு நடிகை பாதையைத் திறந்தார்.! “அதுல நீ தான் நடிக்கணும்” – பிரபல பாடகி பிரகதி குருப்ரசாத் உணர்ச்சி பகிர்வு.!

பரதேசி, வணக்கம் சென்னை போன்ற படங்களுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய பிரகதி, இன்று தமிழ் இசை உலகைத் தாண்டி அமெரிக்காவிலும் தனது குரலால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அமெரிக்காவில் குடியேறிய பின், அங்குள்ள சில ஹாலிவுட் தொடர்களிலும் தோன்றி வருவது, அவரின் கலைப்பயணத்திற்கு ஒரு புதிய பரிமாணமாகிவிட்டது. இந்தப் பாதையில், சுயாதீன இசை உலகில் தனித்தன்மையுடன் முன்னேறிவரும் பாடகர் ஸ்டீபன் செக்கரியாவுடன் மீண்டும் ஒரு புதிய சுயாதீன பாடலில் இணைந்திருப்பது அவருக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி. புதிய வெளியீடு குறித்து வாழ்த்துகளை தெரிவித்தபோது, அந்த அனுபவத்தைப் பற்றி அவர் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

பிரகதி கூறுகையில், “இந்தப் பாடலை நாங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே செய்தோம். ஆனாலும், இன்று வெளிவருவது எனக்கு ஒரு விசேஷமான உணர்வைத் தருகிறது. ஸ்டீபனுடன் நான் 2016-ல் இன்னொரு சுயாதீன பாடலுக்காக இணைஞ்சிருந்தேன். அந்தப் பாடல் எங்களுடைய கரியரில் ஒரு முக்கிய திருப்புமுனை. அந்தப் பாடல் ரிலீஸான பிறகு நான் அதை ஒரு மேடையில்தான் பாடி இருக்கேன். இப்பொழுது வந்திருக்கும் இந்தப் புதிய பாடலுக்கு, வழக்கமான மென்மையான குரல் டோன் இல்லாமல், வேறொரு தனிச்சிறப்பு இருக்க வேண்டும் என ஸ்டீபன் நினைத்தார். அதுதான் என்னை இந்தப் பாடலுக்குள் இழுத்து வந்தது,” என்கிறார். சுயாதீன இசை உலகில் போட்டி அதிகரித்துள்ள சூழலில் தன்னை எப்படி மாறிக்கொள்கிறார் என்பதைப் பற்றி அவர் தொடர்கிறார்.


“நாம் எப்போதும் புதுசாக ஏதாவது செய்யணும் என்பதே சவால். இன்று தமிழ் சுயாதீன இசை உலகுக்கு ப்ளாட்ஃபார்ம்கள் பெரிதாகிவிட்டன. முன்னாடி நம்ம குரலே நம்ம அடையாளம். ஆனால் இப்போ வைரலான விஷயங்களோட பின்னால போகிற கலாசாரம் அதிகமாச்சு. அதுக்குப் பின்னால ஓடாமல், நல்ல ஒரு பாடல் உருவாக்கணும் என்பதுதான் என் நோக்கு. வைரலாகப் போகும் பாடல்களைச் செய்து மூணு மாசத்துக்குப் பிறகு யாருமே அதை கேக்காத நிலை வரக்கூடாது. நான் செய்யும் இசை நீண்டகாலம் மக்களுக்கு நினைவிலிருக்கணும்.”

சமீபத்தில் வெளியான அவரது சுயாதீன பாடலுக்குப் பிறகு, பலர் “இப்போ டான்ஸ் நம்பர் தான் ஹிட் ஆகும், ஹூக் ஸ்டெப் வேண்டும்” என்று அறிவுரை கூறினார்களாம். அதைப் பற்றி அவர் சிரித்தபடியே, “அந்த வழியில் போய் நான் எனக்கே துரோகம் பண்ணிக் கொள்ளக்கூடாது. நம்முடைய கதைகளை உண்மையாகவும் நேர்த்தியாகவும் சொன்னாலே மக்கள் அதை மதிப்பார்கள்,” என்கிறார். சினிமா பயணத்தைப் பற்றியும் அவர் உணர்ச்சியோடு பேசுகிறார். இயக்குநர் பாலா அவர்களின் வாழ்க்கையில் பெரிய பங்காற்றியவர். “’பரதேசி’யில் நான் மூணு பாடல்கள் பாடியிருந்தேன். அப்போ அவரை நெருக்கமாக அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் எனக்கு காட்ஃபாதர் மாதிரி. ஒருநாள் ஒரு கதை எழுதிக்கொண்டு இருந்தபோது, ‘இந்தக் கதையை படம் எடுத்தா நீதான் நடிக்கணும்’னு சொன்னாரு. அந்த அளவுக்கு நம்பிக்கை வச்சது நான் மறக்க முடியாதது. அவர் சொன்னதுக்குப் பிறகுதான் நான் ஆக்டிங் ஸ்கூலுக்கு சென்று பயிற்சி எடுத்தேன். எனக்குள்ள இருக்கும் நடிகரை எப்படி அவர் கண்டுபிடிச்சாரோ இன்னும் புரியல.”

இசையிலும், நடிப்பிலும் தன்னுடைய இடத்தை உருவாக்கிக் கொள்வதில் பிரகதி காட்டும் அர்ப்பணிப்பு, தமிழ் இசை மற்றும் கலை உலகில் அவரின் பயணத்தை இன்னும் பல உயரங்களுக்கு கொண்டு செல்லும் என நம்பலாம்.

Source Credits :